Search

குஜராத்:`பிரதமரே வந்தாலும் தடுப்பேன்!’ -அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் காவலர் ராஜினாமா?

Sunday, 12 July 2020

குஜராத்தில் ஊரடங்கை மீறிய அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் போலீஸ் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குஜராத்தில் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுனிதா யாதவ், இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் கூட அணியாமல் காரில் வந்துள்ளனர். சுனிதா அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தன் நண்பரும் குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
பெண் போலீஸ் சுனிதா
பெண் போலீஸ் சுனிதா
அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சரின் காரில் அவர் மகன் பிரகாஷ் வந்து, தன் நண்பர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார், ஆனால், கான்ஸ்டபிள் சுனிதா விட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. `ஊரடங்கு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்தச் சமயத்தில் இந்தியப் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என சுனிதா கூறியுள்ளார். அதற்கு அமைச்சரின் மகன் `உங்களை (சுனிதா) 365 நாள்களும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என்று கூற, `நான் உங்கள் வீட்டுப் பணியாளோ அடிமையோ இல்லை’ என சுனிதா பதில் அளித்துள்ளார்.
பிறகு சுனிதா, தன் காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து விஷயத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுமாறு சுனிதாவுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் கான்ஸ்டபிள் சுனிதாவும் பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அமைச்சரின் மகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கான்ஸ்டபிள் சுனிதாவுக்கு பாராட்டும் ஆதரவும் தெரிவித்தும் நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் பெரியதாகவே, நேற்று அமைச்சரின் மகன், நண்பர்கள் அனைவரும், ஊரடங்கை மீறியதாகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கான்ஸ்டபிள் சுனிதா போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. `சுனிதா யாதவ் மருத்துவ விடுமுறையில் உள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’ என சூரத் போலீஸ் கமிஷனர் ஆர்.பி பிரம்பத் கூறியுள்ளார். ஆனால், இந்த பிரச்னைக்குப் பிறகு எழுந்த அழுத்தத்தால் கான்ஸ்டபிள் சுனிதா, தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
தன் மகனின் செயல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் குமார் கனானி, ``என் மகன் அவரின் மாமனாருக்கு கொரோனா சிகிச்சையளிக்க என் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார், அப்போது வழி மறித்த பெண் கான்ஸ்டபிள் வண்டியில் ஏன் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது? நீங்கள் ஏன் இந்தக் காரில் வந்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். என் மகன் கூறியதை அந்த கான்ஸ்டபிள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளாமல் விவாதித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குஜராத்தில் சர்ச்சையாகியுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Sidebar One

Contact Form

Name

Email *

Message *